தூத்துக்குடியில் 792 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


தூத்துக்குடியில் 792 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 1 Jan 2019 10:15 PM GMT (Updated: 1 Jan 2019 6:57 PM GMT)

தூத்துக்குடியில் 792 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 792 ஏழை பெண்களின் திருமணத்துக்கு ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். மேலும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.12 ஆயிரம் நிதியுதவியை ரூ.18 ஆயிரமாக உயர்த்தினார். வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய பெண்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்தார்.

உழைக்கும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் நிதியுதவியுடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 1 லட்சம் பெண்களுக்கு மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் ஏழை பெண்களுக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்பட்டியில் 2 நாட்களுக்கு முன்பு 708 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலும், தற்போது தூத்துக்குடியில் 792 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடிக்கு வந்த வெளிநாட்டினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் வந்தால், உள்ளாட்சித்துறை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 601 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி விமான நிலையம் விரைவில் பன்னாட்டு விமான நிலையமாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். 

Next Story