உத்தமபாளையத்தில் புத்தாண்டு அன்று சோகம், கண்மாயில் மூழ்கி மாணவன் உள்பட 2 பேர் பலி
உத்தமபாளையத்தில் புத்தாண்டு நாளில் கண்மாயில் மூழ்கி மாணவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
உத்தமபாளையம்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை பழனிபிரிவு பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் வேளாங்கன்னி (வயது28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கட்டிட தொழிலாளி. இவரது தங்கை ரூபி, உத்தமபாளையம் ஜோசப் நகரில் கணவர் கார்த்திக்குடன் வசித்து வருகிறார்.
புத்தாண்டையொட்டி ரூபி வீட்டுக்கு வேளாங்கன்னி, அவரது தாயார் செல்வி(51), மற்றும் அக்காள் ஸ்டெல்லா (30), அவரது கணவர் தெய்வராஜ்(37), அவர்களது மகன்கள் ஹரிஸ்(12), விஷ்ணு(10) ஆகிய 6 பேர் கடந்த 30-ந்தேதி உத்தமபாளையம் வந்தனர். இதில் ஹரிஸ் கொடைக்கானலில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று காலை இவர்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள். அரையாண்டு விடுமுறை முடிந்து ஹரிஸ் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்பதால் நேற்று மாலை அவர்கள் உத்தமபாளையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு திரும்புவது என்று திட்டமிட்டு இருந்தனர்.
இந்தநிலையில் காலை 11 மணியளவில் வேளாங்கன்னி, ஹரிசை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு உத்தமபாளையம் தண்ணீர்தொட்டி தெரு மேற்கு பகுதியில் உள்ள கல்உடைச்சான் பாறை கண்மாய் பகுதிக்கு சென்றார். அங்கு இருவரும் கை, கால்களை கழுவுவதற்காக கண்மாயில் இறங்கினர். இந்தசமயத்தில் ஹரிஸ் தடுமாறி கண்மாயில் விழுந்து மூழ்கினான். அருகில் இருந்த வேளாங்கன்னி அவனை காப்பாற்ற முயற்சி செய்து சத்தம் போட்டார். அந்த இடம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் யாரும் காப்பாற்ற வரவில்லை. எனவே வேளாங்கன்னி கண்மாயில் இறங்கி ஹரிசை தேடினார். மிகவும் ஆழமுள்ள அந்த கண்மாயில் சேறு, சேகதி மற்றும் பாறை இடுக்குகள் உள்ளன. இதையடுத்து கண்மாயில் மூழ்கி வேளாங்கன்னியும், ஹரிசும் பரிதாபமாக இறந்தனர்.
இதனிடையே காலையில் வெளியில் சென்றவர்கள் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லையே என்று தெய்வராஜ் மற்றும் உறவினர்கள் சந்தேகம் அடைந்து அந்த பகுதியில் தேடினர். அப்போது கல்உடைச்சான் பாறை கண்மாய் கரையில் மோட்டார்சைக்கிள் மற்றும் வேளாங் கன்னி, ஹரிஸ் அணிந்து இருந்து செருப்புகள் கிடந்தன.
எனவே அவர்கள் சந்தேகம் அடைந்து, உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதையொட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கண்மாயில் இறங்கி தேடினார்கள். அப்போது பாறைகளின் இடுக்குகளில் சிக்கி இருந்த வேளாங்கன்னி, ஹரிஸ் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாண்டி, முனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருந்துக்கு வந்தவர்கள் புத்தாண்டு அன்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது உத்தமபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story