மதுரையில் 2018–ம் ஆண்டில் குற்றங்கள், விபத்துகள் குறைந்துள்ளன; மாநகர போலீஸ் கமிஷனர் பேச்சு
மதுரையில் 2018–ம் ஆண்டில் நகை பறிப்பு, கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களும், விபத்துகளும் குறைந்துள்ளது என்று மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.
மதுரை,
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்றிரவு, சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. முதுநிலை தலைவர் ரத்தினவேல், செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:–
நான் 2–வது முறையாக மதுரையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். கடந்த 2005–ம் ஆண்டு மதுரை மாநகர போலீஸ் போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றினேன். அதன் பிறகு தற்போது போலீஸ் கமிஷனராக இங்கு வந்துளேன். மதுரை போன்ற நகரில் பணி அமர்த்தும் போது ஒரு வித அச்சம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் இங்கு வந்து பார்க்கும் போது மரியாதை உள்ள நகரமாக மதுரை திகழ்கிறது. சமுதாயத்தில் முக்கிய அங்கம் காவல்துறை. அவர்கள் நகரை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் வைத்திருக்கும் போது அங்கு தொழில்கள் பெருகும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு லத்தி வைத்து தான் பணியாற்ற முடியும். இப்போது போலீசார் லத்தி வைத்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் வேலை செய்வது கடினம். அதற்கு காரணம் கலாசாரம், நாகரிகம் தான். இப்போதும் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களை காக்க வைக்கக்கூடாது என்று கூறியுள்ளேன். அதனால் தான் தற்போது அதிகமான வழக்குகள் போடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் சென்ற 2018–ம் ஆண்டு குற்றங்கள் குறைந்துள்ளன. நகரில் 40 கொலைகள் நடந்துள்ளது. இது 2017–ம் ஆண்டு 50ஆக இருந்தது. நகை பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளது. 6 மாதத்தில் ஆயிரம் பவுன் கொள்ளை போன நகைகளை கைப்பற்றி உள்ளோம். ஆனால் தற்கொலை, காணமால் போனவர்கள் வழக்குகள் அதிகரித்து உள்ளது.
மதுரை நகரின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் போலீசார் எண்ணிக்கை இல்லை. எனவே போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தினால் குற்றங்கள் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. விரிவாக்கம் காரணமாக மதுரை நகரில் பல்வேறு பகுதிகள் புதிதாக இணைந்துள்ளது. நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் குற்றங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் தல்லாகுளம், அண்ணாநகர், கூடல்நகர், அவனியாபுரம் போன்ற போலீஸ் நிலையங்களை 2ஆக பிரிக்க வேண்டும்.
குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து இடங்களில் கண்காணிப்பு கேமரா வைப்பதன் மூலம் குறைக்கலாம். அதன்படி தற்போது நகரில் பல்வேறு இடங்களில் மேராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கேமரா வைத்த இடங்களில் குற்றங்கள் குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மேகரா வைப்பதற்கு தொழில் நிறுவனங்கள் நிதிஉதவி அளித்து நகரின் பாதுகாப்பை பலப்படுத்த உதவ வேண்டும். நகரில் விபத்தினால் ஏற்படும் இறப்பை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விபத்திற்கு காரணம் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது. விபத்தை தடுக்க ரோட்டின் நடுவே தடுப்புகளை அமைத்தோம். இதன்மூலம் விபத்துகள் குறைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் டி.வி.எஸ். நிறுவன அதிபர் ஹரீஸ், தொழில் சங்க துணைத்தலைவர்கள் தனுஷ்கோடி, ரமேஷ், பாபு, பொருளாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.