ஜி.எஸ்.டி. குறைப்பு அமலான நிலையில் பொருட்களின் விலை குறைய வில்லை; பொதுமக்கள் குற்றச்சாட்டு

23 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், அந்த பொருட்களின் விலை குறையவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மதுரை,
ஜி.எஸ்.டி. என்று சொல்லப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்தியது. அதாவது மறைமுக வரி என்று சொல்லப்படும் வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து நாடு முழுவதும் ஒரே வரி என்று கூறி ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது. அதில் பொருட்களுக்கு ஏற்றபடி 3, 5, 12, 18, 28 சதவீதம் என்ற அளவில் வரி நிர்ணயிக்கப்பட்டது.
இந்த வரிவிதிப்பை தொடர்ந்து சில பொருட்களின் விலை குறைந்தது. ஆனால் பெரும்பாலான பொருட்களின் விலை அதிகரித்தது. எனவே ஜி.எஸ்.டி. குறித்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. எனவே ஒவ்வொரு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தின்போதும் மத்திய அரசு வரி விகிதத்தை குறைத்து வருகிறது. அதன்படி கடந்த 22–ந் தேதி நடந்த கூட்டத்தில் 23 பொருட்களின் மீதான வரி வெகுவாக குறைக்கப்பட்டது. இது ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி சினிமா தியேட்டர் கட்டணம், டி.வி., மானிட்டர் போன்ற பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மதுரையை பொறுத்தவரை எந்த பொருளின் விலையும் குறையவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். உதாரணமாக ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட்டிற்கு 18 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. அதே போல் ரூ.100 மதிப்பிற்கு மேல் உள்ள டிக்கெட்டிற்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டது. எனவே சினிமா கட்டணம் நேற்று முதல் ரூ.8–ல் இருந்து ரூ.20 வரை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படவில்லை. வழக்கமான கட்டணம் தான் நேற்று தியேட்டர்களில் வசூலிக்கப்பட்டதாகவும், மற்ற பொருட்களின் விலையிலும் எந்த மாற்றமும் தெரியவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் விவரம் வருமாறு:–
சிம்மக்கல் செல்வம்:– ஆரம்பத்தில் இருந்தே ஜி.எஸ்.டி. மீது மக்களுக்கு ஒரு தவறான எண்ணம் வந்து விட்டது. விலை உயர்வுக்கு ஜி.எஸ்.டி. காரணம் என்று எண்ணுகின்றனர். ஆனால் இது தவறு. கடந்த காலத்தில் ‘‘ஒரு பொருளுக்கு மத்திய அரசு ஒரு வரியும், மாநில அரசு வாட் என்ற பெயரிலும் ஒரு வரியையும் விதித்தனர். இந்த 2 வரியையும் சேர்த்து தான் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல் கடந்த காலங்களில் பொருட்களை தயாரித்து பில் இல்லாமல் விற்கும் நிலை இருந்தது. இதனால் ஒரு சாரார் மிகுந்த லாபம் அடைந்தனர். ஆனால் ஜி.எஸ்.டி வந்த பிறகு பொருட்களை தயாரிப்பவர்களும், அதனை வாங்குபவர்களும் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்து கணக்கு காட்ட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் ஜி.எஸ்.டி. மட்டுமின்றி வருமான வரியையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், ஒருவரின் வருமானத்தை ஜி.எஸ்.டி. அரசுக்கு காட்டி கொடுக்கிறது. அவர்களின் வருமானம் கண்காணிக்கப்படுகிறது.
ஆனால் சிலர் ஜி.எஸ்.டி.யால் விலை அதிரித்து விட்டது என்று பொய் பிரசாரம் செய்கின்றனர். அவர்களிடம் நான் கேட்பது என்னவென்றால், பல பொருட்களுக்கு இதுவரை ஜி.எஸ்.டி.யை அரசு குறைத்து விட்டது. ஆனால் இதுவரை எந்த பொருளுக்காவது விலை குறைந்து இருக்கிறதா?.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுப்பானடி பாண்டி:– ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கும் போதெல்லாம் வரி குறைக்கப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் இதுவரை குறைத்ததாக அறிவிக்கப்பட்ட எந்த பொருட்களின் விலையும் குறையவில்லை. உதாரணமாக ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட போது சாதாரண ஒட்டலில் சாப்பிட்டால் 12 சதவீதமும், ஏ.சி. ஓட்டலில் சாப்பிட்டால் 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டது. அதன்பின் மத்திய அரசு இதனை வெறும் 5 சதவீதம் என வரியை குறைத்து விட்டது. ஆனால் எந்த ஒட்டலிலும் விலையை குறைக்க வில்லை. மாறாக அடிப்படை விலையை கூட்டி, ஜி.எஸ்.டி வரியை குறைத்து பில் போடுகின்றனர். இதே போல் நிலை தான் அரசு தற்போது அறிவித்துள்ள 23 பொருட்களுக்கும். எதற்கும் விலை குறையாது. எதிர்பார்த்தால் ஏமாளி தான்.