திருவள்ளூர் அருகே கோவிலில் நந்தி சிலை திருட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


திருவள்ளூர் அருகே கோவிலில் நந்தி சிலை திருட்டு நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 Jan 2019 5:00 AM IST (Updated: 2 Jan 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே கோவிலில் நந்தி சிலை திருடப்பட்டது. நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது நுங்கம்பாக்கம் கிராமம். இங்குள்ள மாரியம்மன் சர்வதீர்த்த குளகரையில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக அந்த சிவன் கோவில் அருகே திரண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். பின்னர் நள்ளிரவு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல பூசாரி கோவிலை திறக்க சென்றபோது அங்கிருந்த பழமை வாய்ந்த அஷ்டலிங்க சிவன் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பதையும் அதன் அருகில் இருந்த நந்தி சிலை திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதை அறிந்த நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலில் இருந்த சிவன் சிலையை சேதப்படுத்தியும் அதன் அருகில் இருந்த நந்தி சிலையை திருடி சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மணவாளநகர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை திருவள்ளூர்–ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையான போளிவாக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் வினோத்கண்ணா, மாநில செயலாளர் ரவீந்திரன், கோட்டப்பொறியாளர் பொன்னன், நிர்வாகி துரைப்பாண்டியன் என திரளானோர் கூடி நந்தி சிலையை திருடி சென்ற மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போளிவாக்கம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story