அம்பத்தூரில் போலீசுக்கு பயந்து கிணற்றில் குதித்த திருடன்; மீட்க ஆளில்லாததால் 23 மணி நேரம் தண்ணீரில் பரிதவிப்பு


அம்பத்தூரில் போலீசுக்கு பயந்து கிணற்றில் குதித்த திருடன்; மீட்க ஆளில்லாததால் 23 மணி நேரம் தண்ணீரில் பரிதவிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2019 4:45 AM IST (Updated: 2 Jan 2019 2:35 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூரில் திருட்டில் ஈடுபட்டபோது போலீசார் வந்ததால் தப்பி ஓடிய திருடன் கிணற்றுக்குள் குதித்தார். மீட்க ஆளில்லாததால் வெளியேற முடியாமல் சுமார் 23 மணி நேரம் அவர் பரிதவித்தார்.

அம்பத்தூர்,

சென்னை அம்பத்தூர் இந்தியன் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 48). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 29–ந் தேதி சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். கடந்த 30–ந் தேதி இரவு இவரது வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் 3 பேர் உள்ளே நுழைந்தனர்.

இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி விஜயகுமாருக்கும், அம்பத்தூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் மர்மநபர்கள் தப்பி ஓடினர். அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை இந்தியன் பேங்க் காலனி அருகில் உள்ள சந்திரசேகரபுரம் 3–வது தெருவில் கோபால கிருஷ்ணன் என்பவரது வீட்டின் 60 அடி ஆழ கிணற்றுக்குள் இருந்து ‘‘அய்யோ... காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று குரல் கேட்டது.

இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் பார்த்தனர். அப்போது அங்கு முழங்கால் அளவு தண்ணீரில் ஒருவர் நின்றுகொண்டு செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். இதுபற்றி அம்பத்தூர் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் 6 பேர் கிணற்றுக்குள் இறங்கி அவரை மீட்டனர்.

அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெய்சிங் (44) என்பதும், இந்தியன் பேங்க் காலனியில் விஜயகுமார் வீட்டில் திருடியது இவர்தான் என்பதும் தெரியவந்தது.

கடந்த 30–ந் தேதி இரவு 11 மணி அளவில் ஜெய்சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான கமல், சுரேஷ் ஆகியோர் விஜயகுமார் வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்து பணத்தை திருடி உள்ளனர்.

அப்போது அங்கு வந்த போலீசாரை பார்த்தும் அவர்கள் தப்பி ஓடினர். மற்ற 2 பேரும் வேறு வழியாக தப்பி ஓடிவிட, ஜெய்சிங் மட்டும் போலீசாரின் கண்ணில் இருந்து மறைவதற்காக கிணற்றுக்குள் குதித்து உள்ளார். ஆனால் கிணறு 60 அடி ஆழம் இருந்ததால் அவரால் நினைத்தவாறு கிணற்றுக்குள் இருந்து எளிதில் மேலே ஏறி வர முடியவில்லை.

இதனால் விடிய, விடிய கிணற்றுக்கு உள்ளேயே பரிதவித்த அவர் அதில் இருந்து வெளியேற பல மணி நேரம் போராடியும் முடியாததால் கடைசியில் சோர்ந்து போனார். இதன்பின்புதான் 31–ந் தேதி காலை 11 மணி அளவில் தீயணைப்பு படை வீரர்களால் மீட்கப்பட்டு உள்ளார். ஜெய்சிங் சுமார் 23 மணி நேரத்திற்கும் மேலாக கிணற்றுக்குள்ளேயே தண்ணீரில் தத்தளித்தபடியே இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஜெய்சிங்கை போலீசார் கைது செய்தனர். இவர் மீது வண்ணாரப்பேட்டை ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 3 கொலை வழக்குகள் உள்பட 22 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அவரை போலீசார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவரது கூட்டாளிகள் கமல், சுரேஷ் ஆகியோர் விஜயகுமாரின் வீட்டில் திருடிய ரூ.10 ஆயிரத்துடன் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருட வந்த இடத்தில் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக கிணற்றுக்குள் குதித்த திருடன் ஒரு நாள் முழுக்க அதற்குள் சிக்கி பரிதவித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story