கைகாட்டி அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது


கைகாட்டி அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது
x
தினத்தந்தி 1 Jan 2019 11:00 PM GMT (Updated: 1 Jan 2019 9:13 PM GMT)

பொதுமக்கள் எதிர்ப்பால் கைகாட்டி அருகே செயல்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த கைகாட்டி அருகே உள்ள வெள்ளையக்கோன்பட்டி கிராமத்தின் கடைசி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடை செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மூடக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆகியோரிடம் மனுக்கள் அளித்தனர். இதையடுத்து டாஸ்மாக் கடையை ஜனவரி மாதத்திற்குள் மூட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட்டது.

இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று டாஸ்மாக் கடையை திறந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அந்த பகுதி பொதுமக்கள் முடிவு செய்து கடை திறக்கப்படும் நேரத்திற்கு முன்னதாகவே அந்த கடை முன்பு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் ஜனவரி மாதத்திற்குள் இந்த டாஸ்மாக் கடை மூடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் இன்று (நேற்று) கடையை திறந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

அதற்கு போலீசார், இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பின்னர் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கடை முன் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. பின்னர், டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் வந்து, ‘இந்த டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப் படுகிறது’ என்று கடைமுன் போர்டு எழுதி வைத்தனர். அதன்பேரில், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story