பாகூர் அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்; 2 பேர் கைது


பாகூர் அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-02T02:49:47+05:30)

பாகூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்,

பாகூர் அருகே குடியிருப்புபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 43) தச்சு தொழிலாளி. இவருடைய மகன் சுவேதன், கடந்த 2017-ம் ஆண்டு பாகூர் ஏரிக்கரை அருகே படுகொலை செய்யப்பட்டார். துண்டிக்கப்பட்ட அவருடைய தலையை கொலையாளிகள் பாகூரை அடுத்த தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி போலீஸ்நிலையத்தில் வீசினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகூர் போலீசார் விசாரணை நடத்தி இருளன்சந்தையை சேர்ந்த வினோத், அவருடைய கூட்டாளிகளான சர்மா, தாஸ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுவேதனும், தாசும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருடைய குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் தாஸ் குடும்பத்தினர் வெளியூர் சென்று விட்டனர்.

இந்தநிலையில், நேற்று தாஸ் குடும்பத்தினர் சொந்த ஊரான குடியிருப்புபாளையத்திற்கு வந்தனர். அப்போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தாஸ் உறவினர்களான, மணிகண்டன் (28), ராமமூர்த்தி, ஆனந்தன் (32) ஆகியோர், சுவேதனின் சகோதரர் சேத்திலாலை (21) தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சவரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணிகண்டன், ஆனந்தன் ஆகியோரை கைது செய்தனர். ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.

Next Story