கூடலூரில், கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை
கூடலூரில் கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவர் வருவாய் துறையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பணியின்போது இறந்தார். இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு அவரது மகன் மோசஸ் (வயது 30) கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பு ஏற்றார்.
கூடலூர் கிராம நிர்வாக பணியாற்றி வந்த மோசஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு புத்தாண்டு தினம் என்பதால் தனது குடும்பத்தினரை கிறிஸ்தவ ஆலயத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார். புத்தாண்டு பிரார்த்தனை முடிந்த நிலையில் குடும்பத்தினரை வீட்டுக்கு அழைத்து செல்ல மோசஸ் வரவில்லை.
இதனால் குடும்பத்தினர் நேற்று அதிகாலை 2½ மணிக்கு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே எட்டி பார்த்தனர்.
அப்போது வீட்டின் உள்ளே மோசஸ் தூக்கில் தொங்கியவாறு இருந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மேலும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த மோசசை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மோசசை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கூடலூர் போலீசார் விரைந்து வந்து கிராம நிர்வாக அலுவலர் மோசசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இது குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த தாசில்தார் மகேந்திரன் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறையினர் நேரில் வந்து கிராம நிர்வாக அலுவலர் மோசசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூடலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story