புத்தாண்டு பிறப்பையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


புத்தாண்டு பிறப்பையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 1 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-02T03:16:47+05:30)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புத்தாண்டு பிறப்பையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

தர்மபுரி,

புத்தாண்டு பிறப்பையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், கட்டி தழுவியும், புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பங்கு தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சி.எஸ்.ஐ. ஆலயம்

இதேபோன்று தர்மபுரி சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயத்தில் பாதிரியார் ஜவகர்வில்சன் தலைமையிலும், வேப்பமரத்து கொட்டாய் ஏ.ஜி.சபையில் போதகர் சுந்தர்சிங் தலைமையிலும், கே.கே.நகர் சீயோன் சபையில் போதகர் ராஜேந்திரன் தலைமையிலும் பிரார்த்தனை நடந்தது. கோவிலூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஏசுதாஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் பூலாப்பட்டி சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை புஷ்பராஜ் தலைமையிலும், கடகத்தூரில் பங்குத்தந்தை ஜோதி தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

செல்லியம்பட்டியில் பங்குத்தந்தை ஜார்ஜ் தலைமையிலும், கேத்தனஅள்ளியில் பங்குத்தந்தை மோசஸ் தலைமையிலும், பாலக்கோட்டில் பங்குத்தந்தை சவுரியப்பன் தலைமையிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று அரூரில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பங்குத்தந்தைகள் தேவசகாயசுந்தரம், ஆரோக்கியஜேம்ஸ் ஆகியோரது தலைமையில் நடந்த இந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பென்னாகரம்

பொம்மிடியில் பங்குத்தந்தை ராபர்ட் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் பங்குத்தந்தை அந்தோணிசாமி தலைமையிலும், ஒகேனக்கல்லில் பங்குத்தந்தை போஸ்கோ தலைமையிலும், பென்னாகரத்தில் பங்குத்தந்தை பெரியநாயகம் தலைமையிலும், தென்கரைகோட்டையில் பங்குத்தந்தை கிறிஸ்டோபர் தலைமையிலும், பி.பள்ளிப்பட்டியில் பங்குத்தந்தை சர்க்கரையாஸ் தலைமையிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

புத்தாண்டு பிறப்பையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கிருஷ்ணகிரி பெங்களூரு சாலை தூய பாத்திமா அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ. ஆலயம், ஐ.இ.எல்.சி. தேவாலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு நண்பர்கள், உறவினர்களுக்கு கேக்குகளை வழங்கினார்கள். மேலும் குடியிருப்பு பகுதிகளில் இளைஞர்கள் ஒன்று கூடி கேக் வெட்டி மகிழ்ந்தனர்.

இதே போல மாவட்டம் முழுவதும் புத்தாண்டையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தன. மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story