கோவை மாநகராட்சியில் தடை அமல்: வீடு, வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு


கோவை மாநகராட்சியில் தடை அமல்: வீடு, வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 9:53 PM GMT (Updated: 2019-01-02T03:23:01+05:30)

பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளதால் மாநகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். பொதுமக்களுக்கு துணிப்பைகள் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது.

கோவை,

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துவதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்காமல் அவற்றை சேகரித்து அழிக்க கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகள், வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், சிறு வியாபாரிகள், மருத்துவமனைகள், துணிக்கடைகள், திருமண மண்டபங்கள் மற்றும் பிற இடங்களில் தற்போது உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களை கோவை மாநகராட்சி பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக வீடு வீடாக சென்று சேகரித்தனர். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணித்து தடுக்க கோவை மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுக் கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை மாநகராட்சி பணியாளர்களே வீடுவீடாக நேரிடையாக சென்று சேகரித்து வருகிறார்கள். இதுவரை 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் வீடு, கடைகளில் இருந்து பெறப்பட்டு உள்ளன. அவை, மதுக்கரையில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும். அதை அவர்கள் எரித்து விடுவார்கள் என்றார்.

இதற்கிடையில், கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் கோவையில் உள்ள கடை களுக்கு சென்று பிளாஸ்டிக் பொருட் களை இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று அறிவுரை வழங்கினார். மேலும் கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் நேற்றுக்காலை இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளை பயன்படுத்துமாறு கூறி மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் துணிப்பைகளை இலவசமாக வழங் கினார். இதே போல துணை ஆணையாளர் காந்திமதியும் துணிப்பைகளை இலவசமாக வழங்கினார். கோவையில், நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் துணிப்பைகள் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டன.

பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளாக உள்ள பாக்குமட்டை, சணல் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட துணிப்பைகள் தற்போது ரூ.10 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. பாக்குமட்டையால் செய்யப்பட்ட பொருட்களின் விலையும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்து உள்ளதாக பொதுமக்கள் கூறினார் கள்.

பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் புழக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முதல் கண்ணாடி டம்ளர்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது.


Next Story