குறிஞ்சிப்பாடி அருகே பயங்கரம், புத்தாண்டு கொண்டாட்டத்தில் விவசாயி அடித்து கொலை
குறிஞ்சிப்பாடி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிஞ்சிப்பாடி,
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கோ.அப்பியம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் சேகர்(வயது 50). விவசாயி. இவரது மனைவி ராசாத்தி(45). இவர்களுக்கு சுகந்தி(28), பிரபாவதி(21) என்கிற மகள்களும், திருநாவுக்கரசு(25), பிரபு(23) ஆகிய மகன்களும் உள்ளனர். இவர்களில் சுகந்திக்கு திருமணம் ஆகிவிட்டது.
சேகருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த அன்பரசன். நேற்று முன்தினம் இரவு அன்பரசன், அம்பலவாணன் பேட்டையில் உள்ள தனது நண்பர் பாஸ்கர் என்பவரது வீட்டுக்கு சேகரை ஒரு காரில் அழைத்து சென்றார்.
அதன் பின்னர் நேற்று காலை வரை சேகர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடிப்பார்த்தனர். அப்போது, பாஸ்கரின் வீட்டின் அருகே சேகர் தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்ததை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்தனர். இதுபற்றி அறிந்த சேகரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு ஓடி வந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் விரைந்து வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். இதில் சேகரின் தலை மற்றும் முகம் ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ரத்தம் வடிந்த நிலையில் கிடந்தார். இதன் மூலம் அவரை யாரோ அடித்து கொலை செய்து இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து சேகரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சேகரை காரில் அழைத்து சென்ற அன்பரசன், பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவாகி விட்டனர். இருவரையும் பிடித்தால் தான் இந்த கொலைக்கான காரணம் என்ன?, யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்கிற முழுவிவரம் தெரியவரும் என்பதால் போலீசார் அவர்களை வலை வீசி தேடி வந்தனர். இந்த சூழ்நிலையில் வீட்டில் இருந்த அன்பரசன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாஸ்கர் தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் சேகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த போது, ஏற்பட்ட மோதலில் இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story