பால்கரில் பயங்கரம் செல்போனுக்கு அடிமையான மகளை உயிரோடு கொளுத்திய தந்தை


பால்கரில் பயங்கரம் செல்போனுக்கு அடிமையான மகளை உயிரோடு கொளுத்திய தந்தை
x
தினத்தந்தி 1 Jan 2019 11:25 PM GMT (Updated: 2019-01-02T04:55:30+05:30)

செல்போனுக்கு அடிமையான மகளை தந்தையே தீ வைத்து கொளுத்திய பயங்கர சம்பவம் பால்கரில் நடந்து உள்ளது.

மும்பை, 

செல்போனுக்கு அடிமையான மகளை தந்தையே தீ வைத்து கொளுத்திய பயங்கர சம்பவம் பால்கரில் நடந்து உள்ளது.

செல்போன் மோகம்

இன்றைய இளைய சமுதாயத்தினரின் 6-வது விரல் என செல்போனை சொல்லலாம். பேச மட்டும் இருந்த செல்போன், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் எப்போதும் உடனிருக்கும் பொருளாகவே மாறிவிட்டது.

இப்போது செல்போன் ஸ்மார்ட் போனாக மாறி இணைய வசதிகள், செயலிகள் என அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய மினி கணினியாகவே ஆகிவிட்டது. இதனால் எந்நேரமும் இளைய சமுதாயத்தினர் பலர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தியபடி அதிலேயே மூழ்கி கிடப்பது வாடிக்கையாகிவிட்டது.

மகளை கண்டித்தார்

இப்படி செல்போனில் மூழ்கி கிடந்த தனது பதின்பருவ மகளை பெற்ற தந்தையே உயிரோடு கொளுத்திய அதிர்ச்சி சம்பவம் பால்கரில் நடந்து உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பால்கர் பகுதியை சேர்ந்தவர் முகமது மன்சூரி(வயது40). இவரது 16 வயது மகள் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி கிடந்தார். இது முகமது மன்சூரிக்கு கோபத்தை உண்டாக்கியது. எவ்வளவோ சொல்லியும் அவரது மகள் கேட்கவில்லை.

சம்பவத்தன்று தந்தை, மகள் இருவர் மட்டும் தான் வீட்டில் இருந்தனர். மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றிருந்தனர்.

அப்போது, அவரது மகள் செல்போனை பார்த்து கொண்டிருந்தார். இதனால் முகமது மன்சூரி மகளை கண்டித்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

உயிருக்கு போராட்டம்

இந்த வாக்குவாதம் முற்றியதில் கடும் கோபம் அடைந்த முகமது மன்சூரி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து மகளின் உடலில் ஊற்றி தீயை கொளுத்தி போட்டார்.

அவரது உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது. வேதனை தாங்க முடியாமல் இளம்பெண் கதறினார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து முகமது மன்சூரியின் மகளை மீட்டனர். அவர் சிகிச்சைக்காக மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிறுமி உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, முகமது மன்சூரியை கைது செய்தனர்.

செல்போன் மோகத்துக்கு அடிமையான மகளை தந்தையே தீ வைத்து கொளுத்திய இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story