பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் விற்பனை அங்காடி - கலெக்டர் திறந்து வைத்தார்


பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் விற்பனை அங்காடி - கலெக்டர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 2 Jan 2019 5:22 AM IST (Updated: 2 Jan 2019 5:22 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் விற்பனை அங்காடியை கலெக்டர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை,

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் விற்பனை அங்காடியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி திறந்து வைத்தார்.

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. அந்த பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருள் பயன்படுத்த பல மாதங்களாக பிரசாரங்கள் நடந்தன.

இந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பல்வேறு மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சி சார்பில் திருவண்ணாமலை அசலி அம்மன் கோவில் தெருவில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் விற்பனை அங்காடியினை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி திறந்து வைத்தார். நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம் முன்னிலை வகித்தார்.

அங்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த துணிப் பைகள், பீங்கான் பொருட்கள் போன்றவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

மேலும் அவர் வணிகர்களிடம் “தடை செய்யப்பட்டு உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்றும், இது போன்ற மாற்று பொருட்களை விற்பனைக்கு பயன்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து “இந்த அங்காடி போன்று ஈசான்ய மைதானம் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய அங்காடிகள் தொடங்கப்பட உள்ளது” என நகராட்சி அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் பிரதாப், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத் கண்ணா, கார்த்திக் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story