கடந்த ஆண்டில், மணல் திருட்டில் ஈடுபட்ட 981 பேர் கைது


கடந்த ஆண்டில், மணல் திருட்டில் ஈடுபட்ட 981 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2019 10:15 PM GMT (Updated: 2 Jan 2019 12:06 AM GMT)

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் (2018) மணல் திருட்டில் ஈடுபட்டதாக 981 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை, 


நெல்லை மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 74 கொலை வழக்குகளும், 2018-ம் ஆண்டு 59 கொலை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2007-ம் ஆண்டில் இருந்து கடந்த 12 ஆண்டுகளில் 2014-ம் ஆண்டு 108 கொலைகள் நடந்து உள்ளது. 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018-ம் ஆண்டு கொலைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. 12 கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டு உள்ளது.

மணல் திருட்டு, கடத்தலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மணல் கடத்தல், திருட்டு சம்பந்தமாக 2018-ம் ஆண்டு 667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 981 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த மணல் கடத்தல் சம்பந்தமாக 764 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு பதிவான திருட்டு வழக்கில் 360 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 44 லட்சத்து 1,917 மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 45 பழைய வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.35 லட்சத்து 59 ஆயிரத்து 290 மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2018-ம் ஆண்டு மணல் திருடிய 4 பேர், பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட 3 பேர், போதை கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக 143 பேர் என மொத்தம் 154 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பிற சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்ததாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 24 பேர் கைது செய்யப்பட்டனர். 16 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டை விட 10.37 சதவீதம் சாலை விபத்து குறைந்துள்ளது. விபத்து சாவு 11.82 சதவீதம் குறைந்துள்ளது. நில அபகரிப்பு வழக்கு குறைந்துள்ளது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டை விட 85 சதவீதத்திற்கு அதிகமான சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளன. 2017-ம் ஆண்டு ரூ.70 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டன. தற்போது ரூ.4¾ கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளன. மாவட்ட குற்றப்பிரிவின் மூலம் 2018-ம் ஆண்டு ரூ.6 கோடியே 61 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டன.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செல்போனுக்கு வந்த புகார் அடிப்படையில் 2,650 தகவல்கள் வந்தது. இதில் 2,645 தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 317 புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 223 புகார்களுக்கு ரசீது கொடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கந்து வட்டி வழக்கு 2017-ம் ஆண்டு 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் 2018-ம் ஆண்டு 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story