கடையம் அருகே, போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு; ரவுடி கைது


கடையம் அருகே, போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு; ரவுடி கைது
x
தினத்தந்தி 1 Jan 2019 10:15 PM GMT (Updated: 2 Jan 2019 12:06 AM GMT)

கடையம் அருகே போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய ரவுடி கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடையம், 

ஆங்கில புத்தாண்டையொட்டி நெல்லை மாவட்டம் கடையத்தில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் வடமலைபட்டி பகுதியில் கடையம் போலீஸ் ஏட்டு மாரிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வடக்கு அரியநாயகிபுரம் வாணியர் தெருவை சேர்ந்த சீதாராமன் மகன் கணேசன் (வயது 28), நத்தம் தட்டையை சேர்ந்த இசக்கிபாண்டி, கொட்டாரக்குறிச்சியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் ஆகியோர் வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது, ஆத்திரம் அடைந்த கணேசன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஏட்டு மாரிமுத்துவின் தலையில் வெட்டினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

இதை கவனித்த மற்ற போலீசார் கணேசனை சுற்றி வளைத்து பிடித்தனர். இசக்கிபாண்டி, சங்கர்கணேஷ் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். காயமடைந்த மாரிமுத்து அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ஏட்டு மாரிமுத்து கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தார். இசக்கிபாண்டி, சங்கர்கணேஷ் ஆகியோரை வலைவீசி தேடிவருகிறார்கள். கைது செய்யப்பட்ட கணேசன் மீது கடையம், தூத்துக்குடியில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொள்ளை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story