வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் ரூ.4 கோடிக்கு மதுவிற்பனை - கடந்த ஆண்டை விட விற்பனை குறைவு


வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் ரூ.4 கோடிக்கு மதுவிற்பனை - கடந்த ஆண்டை விட விற்பனை குறைவு
x
தினத்தந்தி 2 Jan 2019 12:12 AM GMT (Updated: 2019-01-02T05:42:38+05:30)

வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் ரூ.4 கோடியே 15 லட்சத்து 81 ஆயிரத்து 220-க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட குறைவாகும்.

வேலூர், 

ஆங்கில புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கே இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்து, ‘கேக்’ வெட்டி புத்தாண்டை கொண்டாடினர். மதுபான பிரியர்கள் புத்தாண்டு தினத்தில் மதுபானத்தைக் குடித்து உற்சாகமாக காணப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நிர்வாக வசதிக்காக டாஸ்மாக் நிர்வாகம் வேலூர், அரக்கோணம் என இரு மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. வேலூர் நிர்வாக மாவட்டத்தில் 123 கடைகளும், அரக்கோணம் நிர்வாக மாவட்டத்தில் 83 கடைகளும் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் புத்தாண்டு தினத்தின்போது மது விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அனைத்து வகையான ரம், விஸ்கி, பிராந்தி போன்ற ‘ஹாட்’ வகைகளும், பீர் வகைகளும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதனால் மது விற்பனை களை கட்டியது.

வேலூர் நிர்வாக மாவட்டத்தில் 5 ஆயிரத்து 50 பெட்டி ‘ஹாட்’ வகைகளும், 3 ஆயிரத்து 535 பெட்டி பீர் வகைகளும் விற்றுத்தீர்ந்தன. இதன் மூலம் ரூ.3 கோடியே 20 லட்சத்து 81 ஆயிரத்து 220 வருவாய் கிடைத்தது. அரக்கோணம் நிர்வாக மாவட்டத்தில் 2 ஆயிரத்து 300 பெட்டி ‘ஹாட்’ வகைகளும், 1,300 பெட்டி பீர் வகைகளும் ரூ.95 லட்சத்துக்கு விற்பனையாகின.

இதன் மூலம் ரூ.4 கோடியே 15 லட்சத்து 81 ஆயிரத்து 220-க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ரூ.6 கோடியே 24 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ரூ.2 கோடியே 8 லட்சத்து 18 ஆயிரத்து 780 விற்பனை குறைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story