சேலம் கொண்டலாம்பட்டியில் லாரி மோதி விபத்து, மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு வந்த தொழிலாளி பலி
சேலம் கொண்டலாம்பட்டியில் மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு வந்த தொழிலாளி, பின்னால் வந்த லாரி மோதியதில் பலியானார்.
கொண்டலாம்பட்டி,
சேலம் மாவட்டம், மல்லியக்கரை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. மின் வாரிய ஊழியர். இவர் சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு பண்டிகைக்காக மோட்டார் சைக்கிளில் வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர் அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பெரியபுத்தூர் ரெயில்வே கேட் அருகே வந்த போது, அங்குள்ள சக்தி கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 42) என்ற கூலித்தொழிலாளி, சேலத்திற்கு வருவதற்கு துரைசாமியிடம் ‘லிப்ட்’ கேட்டுள்ளார்.
இதையடுத்து துரைசாமி தனது மோட்டார் சைக்கிளில் கோவிந்தராஜை பின்னால் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சேலம் நோக்கி வந்தார். கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் மோட்டார் சைக்கிள் சுற்றி வந்து திரும்பியது. அப்போது அந்த வழியாக நாமக்கல்லில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த துரைசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த கோவிந்தராஜ் படுகாயம் அடைந்தார். துரைசாமி லேசான காயம் அடைந்தார். இதையடுத்து அவர்கள் இருவரையும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் இறந்தார். துரைசாமி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ‘லிப்ட்’ கேட்டு வந்த தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story