அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வினியோகம்


அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:45 PM GMT (Updated: 2 Jan 2019 3:42 PM GMT)

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.

பெரம்பலூர்,


தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 1–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதம் அரையாண்டு தேர்வு நடந்தது. கடந்த 22–ந்தேதி அரையாண்டு தேர்வு முடிந்து மாணவ, மாணவிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது.

ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–1, பிளஸ்–2 மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை தவிர்த்து மீதமுள்ள நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது.


அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதையடுத்து நேற்று காலை மாணவ–மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அப்போது திருத்தப்பட்ட அரையாண்டு விடைத்தாள்கள் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வழங்கினர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (மேற்கு) 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3–ம் பருவ விலையில்லா பாடபுத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் விலையில்லா சீருடைகளை பள்ளி தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியைகள் கோட்டம்மாள், மேகலா ஆகியோர் வழங்கினர்.

 இதேபோல பெரம்பலூர்–அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 3–ம் பருவ விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள், 8–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டன.

Next Story