திருநேர்அண்ணாமலை கோவிலில் பணி செய்ய விடாமல் சிவாச்சாரியார்கள் தடுத்து நிறுத்தம் போலீசில் புகார்


திருநேர்அண்ணாமலை கோவிலில் பணி செய்ய விடாமல் சிவாச்சாரியார்கள் தடுத்து நிறுத்தம் போலீசில் புகார்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-02T22:22:06+05:30)

திருநேர் அண்ணாமலை கோவிலில் பூஜை செய்ய சென்ற சிவாச்சாரியார்களை பூஜை செய்யவிடாமல் சிலர் தடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கண்காணிப்பாளர் நரசிம்மன், திருவண்ணாமலை தாலுகா போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருநேர்அண்ணாமலை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்துடன் இணைந்த உபகோவிலாகும். இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் உத்தரவுப்படி, கோவில் இளநிலை உதவியாளர் ராஜலிங்கம் மற்றும் அதிகாரிகள் கோவில் சிவாச்சாரியார்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜை நடத்த திருநேர் அண்ணாமலை கோவிலுக்கு சென்றிருந்தனர்.

அப்போது சிலர் அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்து, ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் ஊழியர்கள் அங்கு பணி செய்ய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் ஞானசேகரனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள துணை கோவில்களில் இந்து சமயஅறநிலைய துறையால் நியமனம் செய்யப்பட்ட சிவாச்சாரியார்கள் தான் பூஜை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி அருணாசலேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள உபகோவில்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருநேர் அண்ணாமலை கோவிலில் பணி செய்ய சென்ற கோவில் பணியாளர்களை பணி செய்ய விடாமல் சிலர் தடுத்துள்ளனர்” என்றார்.

Next Story