வேலூர் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


வேலூர் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jan 2019 4:15 AM IST (Updated: 2 Jan 2019 10:32 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலூர், 

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கால் ஆன தட்டு, தண்ணீர் பாக்கெட்டுகள், கைப்பை, உறிஞ்சுகுழல் உள்பட 14 வகையான பொருட்களுக்கு அரசு தடை விதித்திருந்தது. மேலும் அவற்றுக்கு பதிலாக துணிப்பை, கண்ணாடி டம்ளர், வாழை இலை, மந்தார இலை, தாமரை இலை, பாக்கு மட்டை போன்றவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் குறித்தும், அவற்றுக்கு பதிலாக பயன்படுத்தும் பொருட்கள் குறித்தும் வேலூர் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் இடையே பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் அரசு அறிவித்த 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்தது.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடையை மீறி கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய 400 பேர் கொண்ட குழு, கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று காலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வணிக நிறுவன குடோன்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

வேலூர் மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன், 2-வது மண்டல உதவிகமிஷனர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர், சுண்ணாம்புக்கார தெரு, ரொட்டிக்கார தெரு, அண்ணா பஜார், சிட்டிங் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளை பறிமுதல் செய்தனர்.

மண்டித்தெரு, லாங்குபஜார் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கைப்பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோன்று 1,3,4-வது மண்டலத்திலும் சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், லூர்துசாமி, சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் 175 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும், 2-வது மண்டலத்தில் 1 டன், 3-வது மண்டலத்தில் 55 கிலோ, 4-வது மண்டலத்தில் 200 கிலோ என 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாநகராட்சியில் உள்ள ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டி, சிற்றுண்டி கடைகளிலும் வாழை இலைகளிலேயே உணவு பரிமாறப்பட்டது. உணவுப்பொருட்கள் பார்சல் பெற்று சென்றவர்களிடம் பாத்திரம் கொண்டு வரும்படி கடைக்காரர்கள் அறிவுறுத்தினார்கள். சில ஓட்டல்களில் பார்சலில் வழங்கும் உணவுப்பொருட்களுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள இறைச்சி கடைகளில் வாழை இலைகளில் சிக்கன், மட்டன் ‘பேக்கிங்’ செய்யப்பட்டது. மளிகை கடைகளில் துணிப்பைகளில் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் கடைக்கு வரும்போது கைப்பை கொண்டு வரவேண்டும் என பொதுமக்களை வியாபாரிகள் அறிவுறுத்தினர். துணிப்பைகளில் தேவை அதிகரிப்பு காரணமாக அதன் விலையும் அதிகமாகி உள்ளது.

Next Story