வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த அடகுக்கடை உரிமையாளர் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை
நிலத்தகராறு பிரச்சினையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுத்ததால் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த அடகுக்கடை உரிமையாளரால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
ஆம்பூர் தாலுகா பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41). இவர் ஆம்பூர் ஷராப் பஜார் பகுதியில் அடகுக்கடை வைத்துள்ளார். சுரேஷ் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை கடந்த 2013-ம் ஆண்டு ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் பரமேஸ்வரியிடம் ரூ.11½ லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து பரமேஸ்வரி வாங்கிய நிலத்தை அதன் அருகேயுள்ள நிலத்தின் உரிமையாளர் கோவிந்தராஜ் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது பரமேஸ்வரிக்கும், கோவிந்தராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பரமேஸ்வரி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்தும், அதனை மீட்டுத்தரக்கோரியும் சுரேசிடம் கூறினார். இதுகுறித்து சுரேஷ், கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பரமேஸ்வரியின் தூண்டுதலின் பேரில் சிலர் சுரேசை மிரட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக சுரேஷ் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கோவிந்தராஜ், பரமேஸ்வரி ஆகிய தரப்பினரை அழைத்து விசாரணை நடத்தினர். நிலம் தொடர்பாக திருப்பத்தூர் கோர்ட்டில் சுரேஷ் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையே பரமேஸ்வரி, ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர் சுரேசுக்கு போன் செய்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சுரேஷ் நேற்று காலை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பெட்ரோல் பாட்டிலுடன் தீக்குளிக்க வந்தார்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவு வாயிலின் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சுரேசை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story