தத்தெடுத்த மகளின் நினைவாக அரசு ஆஸ்பத்திரிக்கு இன்குபேட்டர் கருவி - இத்தாலி தம்பதியர் வழங்கினர்
தத்தெடுத்த மகளின் நினைவாக அரசு ஆஸ்பத்திரிக்கு இன்குபேட்டர் கருவியை இத்தாலி தம்பதியர் வழங்கினர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 1981-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒ ரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு லட்சுமி என்று பெயரிடப்பட்டது. இந்த நிலையில் இத்தாலியை சேர்ந்த ஸ்பெடலிட்டி, ஜிசுபி தம்பதியினர் அந்த குழந்தையை 1983-ம் ஆண்டு தத்தெடுத்தனர். இந்த நிலையில் லட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் 16-ந்தேதி இறந்தார்.
அவரது நினைவாக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சைக்கு தேவையான அதிநவீன இன்குபேட்டர் கருவியை தானமாக வழங்கினார்கள். இதற்கான நிகழ்ச்சி நேற்று அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கலைசெல்வியிடம், இத்தாலி தம்பதியினர் ஸ்பெடலிட்டி, ஜிசுபி ஆகியோர் வழங்கினார். இதில் குழந்தைகள் நல டாக்டர்கள் வாணி, கார்த்திகை ரங்கராஜ், அமுதா மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக லட்சுமி குறித்து பேசும் போது, இத்தாலி தம்பதியர் கண்கலங்கினர். 35 ஆண்டுகளுக்கு பிறகு தத்தெடுத்த குழந்தை பிறந்த அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக இன்குபேட்டர் வழங்கிய தம்பதியினரை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பாராட்டினார்கள். இதுகுறித்து இத்தாலி தம்பதியினர் கூறியதாவது:-
இந்தியாவில் குழந்தையை தத்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு ஏஜென்சி மூலம் தெரியவந்தது. அதை தொடர்ந்து முதலில் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து புருனோ என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்தோம். தற்போது புருனோவுக்கு திருமணம் ஆகி, 2 குழந்தைகள் உள்ளது. பெண் குழந்தை தத்தெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மீண்டும் இந்தியாவுக்கு வந்தோம். அதன்பிறகு 1983-ம் ஆண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து லட்சுமி என்கிற பெண் குழந்தையை தத்தெடுத்து, இத்தாலிக்கு அழைத்து சென்றோம். லட்சுமி மனோதத்துவ நிபுணர் படிப்பு படித்து முடித்தார்.
அதை தொடர்ந்து இத்தாலியில் உள்ள ஒரு குழந்தைகள் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சிக்கு லட்சுமியை அழைத்து வந்தோம். பின்னர் லட்சுமி பிறந்த அரசு ஆஸ்பத்திரியை சுற்றி பார்த்து விட்டு சென்றோம். இதற்கிடையில் லட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். நோயின் வேகம் அதிகரித்து புற்றுநோய் உடல் முழுவதும் பர வியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16-ந்தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அவரது நினைவாக லட்சுமி பிறந்த ஆஸ்பத்திரிக்கு பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இன்குபேட்டர் வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நல டாக்டர்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் 2 இன்குபேட்டர்கள் உள்ளது. அதை விட தற்போது இத்தாலி தம்பதியினர் வழங்கியது நவீன வசதி கொண்டது. இந்த இன்குபேட்டரில் குழந்தைகளை வைத்து, ஆம்புலன்சில் ஏற்றி, வேறு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள இன்குபேட்டரை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது சிரமம். இத்தாலி தம்பதியினர் கொடுத்த இன்குபேட்டர் ரூ.5 லட்சம் மதிப்புடையது. எடை குறைவாக மற்றும் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இன்குபேட்டர் பயன்படுகிறது. இத்தாலியில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு கொண்டு வந்து, அங்கிருந்து வாகனம் மூலம் பொள்ளாச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story