பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய சென்ற பேரூராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்


பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய சென்ற பேரூராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்
x
தினத்தந்தி 3 Jan 2019 3:45 AM IST (Updated: 2 Jan 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய சென்ற பேரூராட்சி அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை, 

தமிழகம் முழுவதும் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக மாற்று பொருளை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நிலக்கோட்டை பேரூராட்சி சார்பில், அந்த பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்தால் பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் நிலக்கோட்டை நால்ரோடு, பூ மார்க்கெட், பஸ் நிலையம், துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.

அப்போது பூ மார்க்கெட்டில் சில விவசாயிகள் பாலித்தீன் பைகளில் பூக்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த அதிகாரிகள் பூக்களுடன் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பாலித்தீன் பைகள் தயாரிக்கும் கம்பெனிகளை மூடுவதை விட்டு, விட்டு விவசாயிகளின் பூக்களை பறிப்பது எப்படி நியாயம் என கேட்டு முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பூக்களை திரும்ப கொடுத்தனர்.

மேலும் பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பாலித்தீன் பைகளுக்கு பதிலாக துணிப்பையை பயன்படுத்துங்கள் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதையும் மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story