போச்சம்பள்ளி அருகே ஒரு மாணவி மட்டுமே படிக்கும் அரசு பள்ளி


போச்சம்பள்ளி அருகே ஒரு மாணவி மட்டுமே படிக்கும் அரசு பள்ளி
x
தினத்தந்தி 2 Jan 2019 11:00 PM GMT (Updated: 2 Jan 2019 6:04 PM GMT)

போச்சம்பள்ளி அருகே ஒரு மாணவி மட்டுமே படிக்கும் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜோகிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த ஆண்டு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். இங்கு தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், ஆயா ஆகிய 3 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இங்கு ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்து வருகிறாள். ஒரே ஒரு மாணவிக்காக அரசு பள்ளி செயல்பட்டு வருவது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியை ரேகாவிடம் கேட்டபோது, தனியார் பள்ளிகளின் மோகத்தால் மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அரசு பள்ளியில் மாணவர்களை அவர்கள் சேர்க்க மறுக்கின்றனர். அரசு பள்ளிகளின் சலுகைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது இங்கு ஸ்ரீலேகா என்ற ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்து வருகிறாள் என்றார்.

மேலும், அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்ப்பது குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story