குடகு, மண்டியா, கோலார் மாவட்டங்களில் உறை பனியால் மக்கள் கடும் அவதி தீ மூட்டி குளிர் காய்கின்றனர்
குடகு, மண்டியா, கோலார் மாவட்டங்களில் உறை பனியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் ஏராளமான மக்கள் தீ மூட்டி குளிர் காய்கின்றனர்.
பெங்களூரு,
குடகு, மண்டியா, கோலார் மாவட்டங்களில் உறை பனியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் ஏராளமான மக்கள் தீ மூட்டி குளிர் காய்கின்றனர்.
கடும் குளிர்
கர்நாடகத்தில் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடுமையான குளிர், உறைபனி நிலவுவது வழக்கம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக கர்நாடகத்தில் அவ்வளவாக குளிர் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அவ்வளவாக குளிர் அடிக்கவில்லை. இந்த நிலையில் டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து கர்நாடகத்தில் கடுமையான குளிரும், உறைபனியும் நிலவி வருகிறது.
இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மாலை 5.30 மணிக்கே இருள் சூழ்ந்து குளிர் அடிக்க தொடங்கி விடுகிறது. அதிலும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ெவளியே செல்ல முடியாத அளவுக்கு கடும் பனி நிலவுகிறது.
13 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக...
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வரும். தற்போது கடந்த சில தினங்களாக அங்கு சூரியனே தெரியாத அளவுக்கு பனி மூட்டமாக காட்சி அளிக்கிறது. பகல் நேரங்களிலும் வாகனங்கள் முகப்பு விளக்கை எறியவிட்டப்படியே செல்கின்றன. மலைகள் மற்றும் மரங்கள் சூழ்ந்துள்ள குடகு மாவட்டத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது.
குடகு மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் உறைபனியாக இருக்கும். இந்த ஆண்டு குளிர்காலம் தாமதமாக தொடங்கி உள்ளதால், பிப்ரவரி மாதம் வரை குளிர் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்ப நிலை 13 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக தான் பதிவாகி உள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகை
குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் உறைய வைக்கும் பனியால், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலை 9 மணி வரை பனி மூட்டமாக இருப்பதால், வெளிப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. குடகு மாவட்டத்தில் தற்போது குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு (2018) குடகில் வரலாறு காணாத மழை பெய்ததால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. தற்போது குடகு மாவட்டம் பழைய நிலைக்கு திரும்பியதால், சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகிறார்கள். அங்கு கடும் குளிர் நிலவுவதால் சுவெட்டர், கம்பளி போன்றவற்றின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
மண்டியா, கோலார்
இதேபோல, மண்டியா மாவட்டத்திலும் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், அங்குள்ள மக்கள் குளிரால் நடுங்கி வருகிறார்கள். இதன்காரணமாக பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் சாலையோரங்களில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். இதன் மூலம் கடும் குளிரில் இருந்து தங்களை காத்து வருகிறார்கள்.
இதேபோல் கோலார் மாவட்டத்திலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இதனால், அனைவரும் சுவெட்டர், கையுறை அணிந்து வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் குளிர் புகாத ‘ஜர்கின்’ உள்ளிட்டவற்றை அணிந்து செல்கிறார்கள். இந்த குளிர் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் என்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
Related Tags :
Next Story