முகநூல் மூலம் வாலிபர்களிடம் பழகி ‘ஹனிடிராப்’ முறையில் பணம் பறிப்பு; பெண் உள்பட 5 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு தகவல்
முகநூல் மூலம் வாலிபர்களிடம் பழகி ‘ஹனிடிராப்’ முறையில் பணம் பறித்து வந்த பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கவுடா தெரிவித்தார்.
ஹாசன்,
முகநூல் மூலம் வாலிபர்களிடம் பழகி ‘ஹனிடிராப்’ முறையில் பணம் பறித்து வந்த பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கவுடா தெரிவித்தார்.
5 பேர் கைது
ஹாசன் மாவட்டம் அரிசிகெரேயில் முகநூலில் (பேஸ்புக்) போலியாக கணக்கு தொடங்கி இளம்ெபண் ஒருவர் வாலிபர்கள் சிலருடன் நட்பாக பழகி வந்தார். அவர் தன்னுடன் பழகும் ஆண்களை பார்க்க விரும்புவதாக கூறி தனியாக ஒரு பகுதிக்கு அழைத்து அவர்களை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கி பணம், நகைகளை பறித்து வந்தார். இதுதொடர்பாக அரிசிகெரே போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இந்த நிலையில் மர்மநபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்கவுடா உத்தரவின்பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தனிப்படை போலீசார், ‘ஹனிடிராப்’ முறையில் வாலிபர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த பெண் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் கவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2 தனிப்படைகள்
ஹாசன் மாவட்டம் அரிசிகெரே உள்பட பல்வேறு பகுதிகளில் ‘ஹனிடிராப்’ முறையில் ஏராளமான வாலிபர்களிடம் இளம்பெண் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பணம் பறித்து வந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதனால் அந்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே ஜேனுகல்பெட்டா பகுதியில் கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி பவுர்ணமி பூஜை நடந்தது. இதில் அந்தப்பகுதியை சேர்ந்த திலீப் என்பவர் கலந்துகொண்டார். அவர், பூஜையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, ஒரு பெண் அவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவரும் அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
வாலிபரை தாக்கி...
அப்போது மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சென்றதும் ஒரு கார் அவர்களை வழிமறித்தப்படி வந்து நின்றது. காரில் இருந்து இறங்கியவர்கள் திலீப்பை தாக்கி ரூ.20 ஆயிரம், செல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டனர். காரில் வந்தவர்கள், அந்த பெண்ணின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து திலீப், அரிசிகெரே புறநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அரிசிகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திலீப்பை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றதாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள், துமகூருவை சேர்ந்த அர்பிதா, துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்த பவன், கிரண், பெங்களூருவை சேர்ந்த துரை, ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவை சேர்ந்த ஹேமேஷ் ஹெக்டே என்பது தெரியவந்தது.
எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அர்பிதா தான், ‘ஹனிடிராப்’ முறையில் போலி முகநூல் கணக்குகள் மூலம் வாலிபர்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இவர்கள் பல பேரிடம் ‘ஹனிடிராப்’ முறையில் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நந்தினி, அரிசிகெரே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சித்தராமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சு ஆகியோர் இருந்தனர்.
Related Tags :
Next Story