கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - வேட்டி-சேலை உற்பத்தி பாதிப்பு


கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - வேட்டி-சேலை உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 3 Jan 2019 3:45 AM IST (Updated: 3 Jan 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு வேட்டி-சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த விசைத்தறிகள் மூலம் காட்டன் ரக சேலைகள், வேட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் நெசவு செய்யப்படும் வேட்டி, சேலைகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படும். கடந்த 2016-ம் ஆண்டு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கங்களுக்கிடையே ஏற்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31-ல் முடிந்தது.

புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் மூலம் ஏற்கனவே நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 50 சதவீத கூலி உயர்வு, 20 சதவீத போனஸ், தேசிய விடுமுறை நாட்களில் கூலியுடன் விடுமுறை உள்பட 7 கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

கூலி உயர்வு வழங்கவும், புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தவும் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டவில்லை. அதன் பின்னர் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்நிலையில் புதிய கூலி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதி விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கினர்.

மேலும் போராட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விசைத்தறி தொழிலாளர்கள் சக்கம்பட்டியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. எனவே அரசு துறை அதிகாரிகள் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story