சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 4 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்


சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 4 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்
x
தினத்தந்தி 3 Jan 2019 3:45 AM IST (Updated: 3 Jan 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 4 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தெரிவித்து உள்ளார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2018) திருட்டு குற்ற வழக்குகளை பொறுத்தவரை 191 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 179 வழக்குகளில் (95 சதவீத வழக்குகளில்) குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, திருட்டு போன சுமார் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

குற்ற வழக்குகளில் 2017-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் 12 சதவீதம் திருட்டு சொத்துகள் அதிகமாக மீட்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திருட்டு மற்றும் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வாகன விபத்துகளை பொறுத்தவரை, கடந்த 2017-ம் ஆண்டு 470 சாலை விபத்து இறப்பு வழக்குகளில் 499 நபர்கள் இறந்து உள்ளனர். 2018-ம் ஆண்டு 385 சாலை விபத்து இறப்பு வழக்குகளில் 413 நபர்கள் இறந்து உள்ளனர். 2017-ம் ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு 20 சதவீதம் இறப்பு குறைக்கப்பட்டுஉள்ளது.

அதேபோல் 2017-ல் 1,650 காய விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 2,221 பேர் காயம் அடைந்து உள்ளனர். 2018-ம் ஆண்டு 1,554 காய விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 2,172 நபர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

வாகன விபத்தை குறைக்க சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் பேரின் வாகன ஓட்டுனர் உரிமங்கள் போக்குவரத்துத்துறை உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. சாலை விபத்துகளை குறைக்கவும் மற்றும் குற்ற செயல்களை கண்காணிக்கவும் இதுவரை சாலை பாதுகாப்பு நிதியில் இருந்தும் மற்றும் அரசு ஒதுக்கீட்டிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் 4 இடங்களிலும், மாநில நெடுஞ்சாலைகளில் 2 இடங்களில் பலவண்ண ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு, விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் 1,274 இடங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் சாலை விபத்தை கண்காணிக்கவும், குற்ற வழக்குகள் நடப்பதை கண்காணிக்கவும் 1,338 கண்காணிப்பு கேமராக்கள் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது. அதன் பயனாக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 4 பேர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாலியல் குற்ற வழக்குகளை பொறுத்தமட்டில் 2017-ம் ஆண்டில் 29 வழக்குகளும், 2018-ம் ஆண்டில் 30 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி கஞ்சா விற்பனை தொடர்பாக 22 வழக்குகளும், சூதாட்டம் தொடர்பாக 98 வழக்குகளும், மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக 3,794 வழக்குகளும், மணல் திருட்டு தொடர்பாக 37 வழக்குகளும், போலி லாட்டரி தொடர்பாக 183 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மணல் திருட்டு தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story