சோத்துப்பாக்கம் ஏரியில் பிணமாக கிடந்தவர்: மின்வாரிய ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலம், உடன் வேலை செய்தவர் கைது


சோத்துப்பாக்கம் ஏரியில் பிணமாக கிடந்தவர்: மின்வாரிய ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலம், உடன் வேலை செய்தவர் கைது
x
தினத்தந்தி 3 Jan 2019 5:00 AM IST (Updated: 3 Jan 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

சோத்துப்பாக்கம் ஏரியில் பிணமாக கிடந்த மின்வாரிய ஊழியர், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக அவருடன் வேலை செய்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம்,

பொன்னேரியை அடுத்த தோப்புகொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன்(வயது 24). இவர், செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த 29–ந்தேதி செங்குன்றத்தை அடுத்த சோத்துப்பாக்கம் ஏரியில் கந்தன் பிணமாக கிடந்தார். அவரது உடலின் மீது மோட்டார்சைக்கிளும் கிடந்தது. அவரது உடலை கைப்பற்றிய செங்குன்றம் போலீசார், அவர் கொலை செய்யப்பட்டாரா? என விசாரித்து வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் கந்தனுடன் வேலை செய்துவந்த மீஞ்சூரை அடுத்த செம்பியம்மணிலி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த கணபதி (23) என்பவர்தான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலை ஏரியில் வீசியது தெரிந்தது.

கணபதியை, செங்குன்றம் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் கணபதி அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:–

நான், மணலி புதுநகரை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தேன். இதை அறிந்த அரசியல் பிரமுகர், என்னை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தார். அவரும், கந்தனும் நண்பர்கள். எனது கள்ளக்காதல் குறித்து அந்த அரசியல் பிரமுகருக்கு கந்தன்தான் தகவல் கொடுத்து வந்தார் என நினைத்து கந்தனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

சம்பவத்தன்று கந்தனிடம் நைசாக பேசி மது வாங்கி கொடுத்தேன். அவருக்கு போதை தலைக்கேறியதும் சோத்துப்பாக்கம் ஏரிக்கு அழைத்துச்சென்று கழுத்தை நெரித்துக்கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை ஏரியில் வீசினேன். அவர் ஏரியில் தவறிவிழுந்து இறந்ததாக போலீசாரை நம்ப வைக்க கந்தனின் உடல் மீது அவரது மோட்டார்சைக்கிளை போட்டுவிட்டு வந்துவிட்டேன். ஆனாலும் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் செங்குன்றம் போலீசார் கணபதி மீது வழக்குப்பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story