ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி; நண்பர் படுகாயம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஸ்ரீபெரும்புதூர்,
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் வின்னு (வயது 21). இவர் ஸ்ரீபெரும்புத்தூர் தான்தோன்றி அம்மன் கோவில் தெருவில் நண்பர் பொன்மணி(23) என்பவருடன் வாடகை வீட்டில் தங்கி ஒரகடத்தில் உள்ள கனரக வாகனங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலைசெய்து வந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பொன்மணி மாம்பாக்கத்தில் உள்ள கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
நண்பர்களான இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் வாலிபர் வின்னு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பொன்மணி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வின்னுவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதணைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
விபத்தில் பலியான வின்னு படிப்பை முடித்து நீண்ட நாட்களாக வேலை தேடி வந்த நிலையில் கடந்த மாதம்தான் ஒரகடத்தில் வேலை கிடைத்து பணியில் சேர்ந்தது, குறிப்பிடத்தக்கது.