ஒரகடம் அருகே அரசு பஸ் சிறைபிடிப்பு


ஒரகடம் அருகே அரசு பஸ் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2019 11:00 PM GMT (Updated: 2 Jan 2019 7:23 PM GMT)

ஒரகடம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள எழிச்சூர் ஊராட்சியில் உள்ள பனையூர், மதுவந்தாங்கல், மதுரா புதுப்பேர் உள்ளிட்ட கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் இருந்து மாணவ, மாணவிகள் தாம்பரம் படப்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், படப்பை, ஒரகடம், வழியாக எழிச்சூர் வரை அரசு பஸ் இயக்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் இந்த பஸ் ஒரு நாளைக்கு 6 முறை வருவதும் 6 முறை திரும்ப செல்வதும் வழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 மாதமாக 4 முறை வந்து செல்வதாகவும் சில நேரங்களில் நேரம் கடந்து வருவதாலும் இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் மதியம், 2½ மணி முதல் இரவு 8 மணிவரை இந்த பகுதிக்கு பஸ் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ- மாணவிகள் தாம்பரத்தில் இருந்து எழிச்சூர் வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் எழிச்சூரில் இருந்து பாலூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குறைகளை கேட்டறிந்தனர். எங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்சை சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story