பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கடையடைப்பு- ஆர்ப்பாட்டம்


பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கடையடைப்பு- ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:45 PM GMT (Updated: 2 Jan 2019 7:28 PM GMT)

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கும்பகோணத்தில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம்,

பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், 51 மைக்ரான் தடிமனுள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் பாலித்தீன் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்படி கும்பகோணத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டு கடை வாசலில் உற்பத்தி நிறுத்தம் என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டு இருந்தது.

மேலும் கும்பகோணத்தில் பாலித்தீன் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பாலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். செயலாளர் அண்ணாமலை, துணை செயலாளர் பூரண்குமார், பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 51 மைக்ரான் தடிமனுக்கு மேல் உள்ள பாலித்தீன் பைகளை மறுசூழற்சி செய்வதற்கு வாய்ப்பு உள்ளதால் அந்த பைகளை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

வத்தல், வடகம், ஊறுகாய், நிலகடலை, கடலை மிட்டாய், பொறிவகைகள் போன்ற பொருட்களை வேறு எதிலும் அடைத்து விற்க முடியாதததால், மறுசூழற்சி செய்ய கூடிய அனைத்து பாலித்தீன் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 25 மொத்த விற்பனையாளர்கள், நேரடி தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story