மோட்டார் சைக்கிள் மோதி விபத்து வடமாநில பெண் உள்பட 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி விபத்து வடமாநில பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-03T01:05:13+05:30)

ராமநத்தம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வடமாநில பெண் உள்பட 2 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ராமநத்தம், 


ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியை சேர்ந்தவர் ராம்பிரசாத் மனைவி லத்திஹரிஜன்(வயது 60). இவர் தனது உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து ஒரு பஸ்சில் லத்திஹரிஜன் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆன்மிக சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். தமிழகத்தில் சில கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்த அவர்கள் ராமேசுவரத்திற்கு சென்று அங்கு புனிதநீராடி சாமிதரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.

அதிகாலை 4.30 மணிக்கு அந்த பஸ், கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த கல்லூர் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, பஸ்சை டிரைவர் சாலையோரமாக நிறுத்தினார். இதையடுத்து இயற்கை உபாதைக்காக பஸ்சில் இருந்த சிலர் இறங்கி, சாலையை கடந்து சென்றனர். அவர்களுடன் லத்திஹரிஜனும் இறங்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்னல்வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் லத்திஹரிஜன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லத்திஹரிஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட வாலிபரும் ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து பலியானார். அப்போது அவ்வழியாக சென்ற பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் சாலையில் கிடந்த வாலிபரின் உடல் மற்றும் தலையில் ஏறி சென்றது. இதில் அந்த வாலிபரின் தலை முழுவதுமாக நசுங்கி உருவம் தெரியாத அளவிற்கு சேதமானது.

இது பற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். விசாரணையில் விபத்தில் பலியான வாலிபர், பெரம்பலூர் மாவட்டம் கீழப்பெரம்பலூரை சேர்ந்த சண்முகம் மகன் பழனிவேல் (34) என்பதும், அவர் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்ற போது விபத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்தது.

மேலும் பழனிவேல் சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் ஜூஸ் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்ததும், புத்தாண்டு விடுமுறையில் குழுமூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்து மனைவி, குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் வேலைக்கு சென்னை சென்றபோது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

விபத்தில் பலியான லத்திஹரிஜன், பழனிவேல் ஆகியோரது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story