ஓட்டலில் சாப்பாடு வாங்க பாத்திரம்-துணிப்பை கொண்டு வருபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி


ஓட்டலில் சாப்பாடு வாங்க பாத்திரம்-துணிப்பை கொண்டு வருபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி
x
தினத்தந்தி 2 Jan 2019 10:45 PM GMT (Updated: 2 Jan 2019 8:06 PM GMT)

ஓட்டலில் சாப்பாடு வாங்க பாத்திரம், துணிப்பை கொண்டு வருபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் உள்ளிட்ட இடங்களில் மாற்று ஏற்பாடாக துணிப்பைகள், பாத்திரங்கள், வாழை இலை, பாக்கு மரத்தட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில ஓட்டல்களில் பார்சல் சாப்பாடு டப்பாக்கள் மூலம் வழங்கப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டுள்ளது. அதாவது சாப்பாடு, டிபன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பாத்திரம், துணிப்பைகள் கொண்டு வந்து உணவு பொருட்களை வாங்கி சென்றால் அவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று ஓட்டலில் சுவரொட்டி ஒட்டி உள்ளனர். மேலும் இந்த சலுகை மூன்று மாதங்களுக்கு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓட்டலின் உரிமையாளர் மூர்த்தி கூறியதாவது:- நான் எனது தோட்டத்தில் இயற்கையான முறையில் விவசாயம் செய்து வருகிறேன். இதற்காக ஒரு வருடத்திற்கு 50 லோடு குப்பைகளை டிராக்டர் மூலம் வாங்கி வருகிறேன். இதில் ஒரு லோடில் சுமார் 200 கிலோ அளவில் பிளாஸ்டிக் இருக்கிறது. இதுமிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து பொருட்களை வாங்க மாற்று ஏற்பாடு செய்வதற்காகவும் ,மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தான் எனது ஓட்டலில் பார்சலுக்கு 10 சதவீதம் சலுகை கட்டணத்தை அறிமுகப்படுத்தினேன்.

முதலில் டிபனுக்கு தான் இந்த சலுகை அறிமுகப்படுத்தினேன். பின்னர் மதிய சாப்பாடு பார்சல் தான் அதிகம் போகும் என்பதால்

சாப்பாட்டிற்கும் இந்த சலுகையை அறிமுகப்படுத்தினேன். பிளாஸ்டிக் தடை செய்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் பார்சல் சாப்பாடு வாங்குவது குறைந்துள்ளது. நேற்று மட்டும் 5 பார்சல்களை தூக்கு சட்டி மற்றும் டிபன் கேரியரில் வாங்கி சென்றுள்ளனர். நிச்சயமாக எதிர்வரும் நாட்களில் படிப்படியாக பார்சல் வாங்க வருபவர்கள் பாத்திரம் கொண்டு வந்து வாங்கும் நிலை ஏற்படும், என்று தெரிவித்தார்.

Next Story