தரமற்ற முறையில் போடப்பட்ட தார்சாலை பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்


தரமற்ற முறையில் போடப்பட்ட தார்சாலை பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 3 Jan 2019 3:30 AM IST (Updated: 3 Jan 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

தரமற்ற முறையில் தார்சாலை அமைக்கும் பணி நடந்ததால் அந்த பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்யாறு, 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள நாவல்பாக்கம் முதல் கொருக்காத்தூர் வரை உள்ள சாலை மண்சாலையாக இருந்தது. கொருக்காத்தூரில் உள்ள பாலத்தை கடந்ததும் வேலூர் மாவட்ட எல்லை ஆரம்பித்து விடுகிறது. நாவல்பாக்கத்திற்கும் கொருக்காத்தூருக்கும் இடையே மணலவாடி, மேல்சீசமங்கலம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. எனவே இந்த மண் சாலையை மாற்றி தார்சாலை அமைக்க வேண்டும் என மேற்கண்ட கிராமங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி 5 ஆண்டு சாலை பராமரிப்பு உட்பட ரூ.81 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு கலவை- வாழப்பந்தல் இடையே இணைப்பு சாலை தார்சாலையாக அமைக்க உத்தரவிடப்பட்டது. இந்த பணிகள் கடந்த ஆண்டு மார்ச் 5-ந் தேதி தொடங்கி டிசம்பர் 5-ந் தேதிக்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த சாலையில் 4 சிறுபாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரம் ஏரிக்கரை வழியாக சாலை அமைக்கப்பட வேண்டும்.

ஆனால் சாலை பணிகளை உரிய காலத்தில் தொடங்கி மேற்கொள்ளாமல் காலம் கடத்திவிட்டு தற்போது அவசர, அவசரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன் தினம் நாவல்பாக்கம் கூட்ரோடு பகுதியிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டருக்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தரமற்ற முறையில் சாலை அமைத்ததால் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. சரியான முறையில் சாலை அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை. பகலில் சாலை பணிகள் அமைத்தால் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படும் என கருதி இரவில் பணிகள் நடந்தன.

இந்த நிலையில் தரமற்ற முறையில் நடந்த சாலை பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், ஒன்றிய பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உதவி செயற்பொறியாளர் பாஸ்கரிடம் பணிகள் முடிந்த இடத்தில் இதுதான் தார்சாலையா? என கேட்டு அவர்கள் தார்சாலையை கையாலேயே பெயர்த்து எடுத்தனர். இந்த அளவுக்கு சாலையை மோசமாக அமைக்கிறீர்களே? என கேட்டு ஆவேசமாக பேசினர்.

அதனை பார்த்த செயற்பொறியாளர் பாஸ்கர், பணி மேற்பார்வையாளர் வேலு என்பவரை அழைத்து கண்டித்தார். தரமானதாக போடாமல் எதற்காக இப்படி செய்கிறாய்... ஒப்பந்ததாரர் யாராக இருந்தாலும், இந்த சாலைகளை மீண்டும் தோண்டி சரியான முறையில் அமைக்க வேண்டும் என எச்சரித்தார்.

Next Story