மானாமதுரை, காரைக்குடி, சிங்கம்புணரியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


மானாமதுரை, காரைக்குடி, சிங்கம்புணரியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Jan 2019 3:30 AM IST (Updated: 3 Jan 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு அங்கிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரன் அறிவுரையின் பேரில் மானாமதுரை பகுதியில் உள்ள சிவகங்கை ரஸ்தா, குண்டுராயர் தெரு, சுந்தரபுரம் கடை வீதி, பழைய ராமநாதபுரம் ரஸ்தா, பழைய காளையார்கோவில் ரஸ்தா உள்ளிட்ட பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், சிறப்பு சார்பு ஆய்வாளர் முனியசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் தனியார் மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு செய்து அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

காரைக்குடியில் நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் தலைமையில் நகராட்சி பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் காரைக்குடி பகுதியில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள், மளிகை கடைகள், துணிக்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு உள்ளதா என்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டன. மேலும் கடைகளின் உரிமையாளர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதேபோல் சிங்கம்புணரி பகுதியில் உள்ள கடைகளில் பேரூராட்சி உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பேரூராட்சி மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், துணை மேற்பார்வையாளர் தென்னரசு, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உடனிருந்தனர். சிங்கம்புணரி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story