மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு மாதத்திற்குள் பிரச்சினைகளை ஆராய்ந்து தவறுகள் களையப்படும்; புதிய துணைவேந்தர் பேட்டி


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு மாதத்திற்குள் பிரச்சினைகளை ஆராய்ந்து தவறுகள் களையப்படும்; புதிய துணைவேந்தர் பேட்டி
x
தினத்தந்தி 3 Jan 2019 4:45 AM IST (Updated: 3 Jan 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத காலத்திற்குள் பிரச்சினைகளை ஆராய்ந்து தவறுகள் களையப்படும் என்று புதிய துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் கூறினார்.

மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த செல்லத்துரை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எம்.கிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக முறைப்படி பொறுப்பேற்று கொண்டார்.

முன்னதாக பல்கலைக்கழகத்தின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பதவி ஏற்புக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 17–வது துணைவேந்தராக பதவி ஏற்றுள்ளேன். சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்த நான், ஆண்டவன் அருளாலும், எனது குடும்பத்தினரின் ஆசியோடும் ஆராய்ச்சி பணிகளுக்காக 22 நாடுகளுக்கு சென்றுள்ளேன். இந்த பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றிய போது, உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது. தற்போது சில பிரச்சினைகளால் தரம் சரிந்துள்ளது.

நாம் கற்ற கல்வியை உலகிற்கு எடுத்துச்சொல்ல மறந்தால் உலகப்புகழ் பெற முடியாது. எனவே ஒழுக்கமான மாணவர்களை உருவாக்கவும், ஒழுக்கமான பேராசிரியர்களை நியமிக்கவும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். இங்குள்ள பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்த சர்வதேச தரம் வாய்ந்த நிறைய ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுத வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் சிலர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்தமாக அனைவரையும் பாதிக்கிறது. தவறுகளை திருத்திக்கொண்டால் தரம் உயரலாம். காமராஜர் பல்கலைக்கழகத்தில் மல்லிகை பூ ஆராய்ச்சி கூடம், விவசாய ஆராய்ச்சிக்கூடம் ஆகியன அமைக்கப்படும். நான் பொழுதுபோக்க பல்கலைக்கழகம் வரவில்லை. ஒரு மாத காலத்திற்குள் பிரச்சினைகளை ஆராய்ந்து தவறுகள் களையப்படும். எந்த பாடப்பிரிவில் கல்வித்தரம் குறைந்துள்ளதோ, அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களை வைத்துத்தான் பல்கலைக்கழகத்தின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story