சிவகாசியில், ஒரேநாளில் 500 கடைகளில் அதிகாரிகள் சோதனை; 350 கிலோ பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல்


சிவகாசியில், ஒரேநாளில் 500 கடைகளில் அதிகாரிகள் சோதனை; 350 கிலோ பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:15 AM IST (Updated: 3 Jan 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் நேற்று 500 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி 350 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

சிவகாசி,

பிளாஸ்டிக்கால் ஆன தட்டு, தேனீர்குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சுகுழல், கைப்பை உள்பட 14 வகையான பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அந்த தடை நேற்றுமுன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால் இதுதொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்தாத நிலையில் நேற்று சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

சிவகாசி ரத வீதியில் உள்ள 200–க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த சோதனையில் அதிகஅளவில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் புதுரோடு, என்.ஆர்.கே.ஆர்.வீதி ஆகிய பகுதியில் உள்ள கடைகளில் நடைபெற்ற சோதனையிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த 30 கடைகளுக்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ஒரு நாள் மட்டும் 500–க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது.

இது குறித்து சிவகாசி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜாராமன் கூறுகையில், இந்த சோதனை தொடரும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாராவது பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story