கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2019 11:00 PM GMT (Updated: 2 Jan 2019 8:38 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடுத்ததாக மறியல் போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர்.

திருச்சி,

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரப்படுத்திட வேண்டும், துறை அமைச்சர் அறிவித்தப்படி தினக்கூலி ரூ.380-ஐ வழங்க வேண்டும், கஜா புயல் பணிக்கு சென்றால் பணி நிரந்தரம் செய்வதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் கலெக்டர் அலுவலகம் அருகே மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே திரண்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொது செயலாளர் ராஜ ராஜேந்திரன் தலைமை தாங்கினார். திருச்சி மண்டல செயலாளர் ரெங்கன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் முத்துபாண்டி, திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். காலை 10 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி 2 போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசு எந்த சம்பளமும் வழங்குவது இல்லை. மின்வினியோகம் உள்ளிட்ட புகார்களை சரி செய்ய செல்லும் போது சம்பந்தப்பட்ட புகார்தாரர் வீட்டில் ஒரு சிறிய தொகையை பெற்றுக்கொள்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக் கூலி ரூ.380 நிர்ணயம் செய்து அரசு வழங்க வேண்டும்.

மின்வாரியத்தில் கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 1998-ம் ஆண்டு முதல் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு எடுத்தனர். 50 ஆயிரம் பேரை ஒப்பந்த தொழிலாளர்களாக பணிக்கு சேர்த்தனர். இதில் 40 ஆயிரம் பேரை நிரந்தர பணியாளர்களாக மாற்றி விட்டனர். அவர்கள் லைன்மேன், போர்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கு சென்று விட்டனர். 8,500 பேருக்கு மட்டும் பணி நிரந்தரமாக்கவில்லை.

தி.மு.க. ஆட்சி காலத்தில் வேலைக்கு எடுக்கப்பட்டதால் பணி நிரந்தரம் செய்யாமல் வைத்துள்ளனர். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக மறியல் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story