உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு, ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட மாணவி, கீழே குதித்து தப்பினார்
உளுந்தூர்பேட்டை அருகே ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட மாணவி கீழே குதித்து தப்பினார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய மாணவி. எலவனாசூர்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் புத்தாடை வாங்குவதற்காக மாணவி ஒரு ஆட்டோவில் எலவனாசூர்கோட்டையில் உள்ள துணிக்கடைக்கு சென்றார். பின்னர் புத்தாடை வாங்கிவிட்டு அதே ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் மாணவியின் வீட்டுக்கு செல்லும் வழியில் செல்லாமல் மாற்றுப்பாதையில் ஆட்டோ டிரைவர் சென்றதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம்போட்டார். ஆனால் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக அந்த மாணவியை ஆட்டோ டிரைவர் மிரட்டி, அவரை கடத்தி சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த மாணவி ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அந்த மாணவி எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மாணவியை கடத்தி சென்றதாக புகைப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஆட்டோ டிரைவர் மணிகண்டன்(வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட மாணவி கீழே குதித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story