மாநில அந்தஸ்துகோரி நாளை போராட்டம்: அரசியல் கட்சியினர் டெல்லி பயணம், முதல்–அமைச்சர் வழியனுப்பி வைத்தார்


மாநில அந்தஸ்துகோரி நாளை போராட்டம்: அரசியல் கட்சியினர் டெல்லி பயணம், முதல்–அமைச்சர் வழியனுப்பி வைத்தார்
x
தினத்தந்தி 2 Jan 2019 11:45 PM GMT (Updated: 2019-01-03T02:18:13+05:30)

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள அரசியல் கட்சியினர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்களை முதல்–அமைச்சர் நாராயணசாமி வழியனுப்பி வைத்தார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பெடிக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம், கவர்னர் கிரண்பெடி தன்னிச்சையாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் புதுவை மாநில உரிமைக்கு பங்கம் ஏற்பட்டு இருப்பதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. மாநில உரிமையை பெற மாநில அந்தஸ்தை பெறுவதே தீர்வு என காங்கிரஸ் கட்சி தலைமையில் நடந்த அரசியல் கட்சிக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இடையூறாக இருக்கும் கவர்னர் கிரண்பெடி வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், புதிய நீதிக்கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்பட 21 அரசியல் கட்சிகள், மாணவர் கூட்டமைப்பு மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்க உள்ளன. இதற்காக அந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 420 பேர் நேற்றுக்காலை புதுவையில் இருந்து ரெயில் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

அவர்களை முதல்–அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்கள் ரெயில் நிலையத்திற்கு நேரில் சென்று வழியனுப்பி வைத்தனர். இந்த ரெயில் நாளை(வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் டெல்லி செல்கிறது.

முதல்–அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று (வியாழக்கிழமை) புதுவையில் இருந்து காரில் சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர். அங்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகள், எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மனு அளிக்க உள்ளனர். தொடர்ந்து டெல்லியில் தங்கி இருக்கும் தொண்டர்கள் வருகிற 6–ந் தேதி இரவு ரெயில் மூலம் புதுவைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே அறிவித்தபடி என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் டெல்லி போராட்டத்தில் பங்கேற்க செல்லவில்லை.


Next Story