அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு எதிர்ப்பு: முத்தியால்பேட்டையில் சாலைமறியல் - வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. உள்பட 107 பேர் கைது


அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு எதிர்ப்பு: முத்தியால்பேட்டையில் சாலைமறியல் - வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. உள்பட 107 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jan 2019 4:00 AM IST (Updated: 3 Jan 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்தியால்பேட்டையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. உள்பட 107 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக கட்சிகள், இந்த பிரச்சினை குறித்து நாடாளுமன்ற நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சினை நேற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலை கிளப்பியது. மக்களவை காலையில் கூடியதும் இந்த பிரச்சினையை எழுப்பிய அ.தி.மு.க. எம்.பி.க்கள், சபையின் மையப்பகுதிக்கு சென்று அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்து வந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் 25 பேரை 5 நாட்கள் இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

அதேபோல் மாநிலங்கவையிலும் தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட தமிழக எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து அவைத்தலைவர் வெங்கையாநாயுடு உத்தரவிட்டார்.

இந்தநிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு முத்தியால்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. உள்பட 107 பேரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.


Next Story