கால்நடை நலத்துறை அலுவலகத்தில் கவர்னர் அதிரடி ஆய்வு; அதிகாரிகள் துரிதமாக செயல்பட வலியுறுத்தல்
கால்நடை நலத்துறை அலுவலகத்தில் அதிரடியாக ஆய்வு செய்த கவர்னர் கிரண்பெடி அதிகாரிகள் துரிதமாக செயல்படவேண்டும் என வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் நேற்று காலை புதுவை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம் அருகே உள்ள கால்நடை நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம் அலுவலகத்தின் தூய்மை, கோப்புகளை முறையாக பராமரித்தல் குறித்து கேள்விகள் எழுப்பினார். நிர்வாக ரீதியாக சில குறைபாடுகள் இருப்பதை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார். அங்குள்ள கோப்புகள் அனைத்தும் காகிதங்களில் இருந்தது. இதனை பார்த்த கவர்னர் கிரண்பெடி, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு கோப்புகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
பின்னர் அதிகாரிகளிடம், கால்நடை நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் மேம்படுத்த வேண்டும். கடைகோடியில் இருக்கும் விவசாய கூலி தொழிலாளிக்கும் கூட கால்நடை நலத்துறையின் திட்டங்கள் சென்று பயன்தர வேண்டும். அதற்கேற்ப அதிகாரிகள் துரிதமாக பணியாற்ற வேண்டும். சில அதிகாரிகளுக்கு இதற்கான பயிற்சி தேவைப்படுகிறது. மேலும் துறையின் இணையதளம் முழுவதுமாக ஆங்கிலத்திலேயே இருப்பதால் விவசாயிகள் கால்நடைவளர்ப்பு திட்டங்களை அறிந்து கொள்வதில் சிரமங்கள் உள்ளன. கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு தொடர்பான விபரங்களையும் ஆடியோ வசதியுடன் இணையத்தில் இணைக்க வேண்டும்.
துறையின் இயக்குனர் அலுவலக வளாகம் தூய்மையாக இல்லை. அதனை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த பட்சம் அலுவலகத்தையாவது வெள்ளையடித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நான் அடுத்த மாதம்(பிப்ரவரி) இங்கு வந்து மீண்டும் ஆய்வு நடத்துவேன் என்றார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.