காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு தீப்பந்தங்களை காட்டி காட்டுக்குள் விரட்டிய பொதுமக்கள்


காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு தீப்பந்தங்களை காட்டி காட்டுக்குள் விரட்டிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:15 AM IST (Updated: 3 Jan 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

வளநாடு பகுதியில் காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் ஒன்று திரண்டு தீப்பந்தங்களை காட்டி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் காட்டெருமைகள் அதிகளவு வசித்து வருகின்றன. அந்த காட்டெருமைகள் அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை வளநாடு அருகே உள்ள கொடம்பறை என்ற கிராமத்தில் திடகாத்திரமான 5 காட்டெருமைகள் ஊருக்குள் புகுந்தன.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அந்த காட்டெருமைகளை விரட்ட முயற்சித்தபோது நகராமல் பொதுமக்களை விரட்ட தொடங்கின. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், பொதுமக்கள் தீப்பந்தங்களை எடுத்து வந்து காட்டெருமைகளை விரட்டினர். அப்போதும் அவைகள் காட்டுக்குள் போகாமல் அங்கும், இங்குமாக ஓடின. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு காட்டெருமைகளை காட்டுக்குள் பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.

அந்த காட்டெருமைகள் மீண்டும் கிராமத்துக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மலையடிவாரத்தில் சில மணி நேரம் காத்திருந்தனர். காட்டெருமைகள் மீண்டும் வராததை உறுதி செய்த பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story