சபரிமலைக்கு மாலை அணிந்து கன்னியாகுமரிக்கு வந்த வெளிநாட்டு பெண் பக்தர்களால் பரபரப்பு


சபரிமலைக்கு மாலை அணிந்து கன்னியாகுமரிக்கு வந்த வெளிநாட்டு பெண் பக்தர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jan 2019 4:30 AM IST (Updated: 3 Jan 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலைக்கு மாலை அணிந்து கன்னியாகுமரிக்கு வந்த வெளிநாட்டு பெண் பக்தர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் என்பதால் கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்தநிலையில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த தாமஸ் பீட்டர் என்பவரது தலைமையில் 20 பெண்கள் உள்பட 62 பேர் தமிழகத்துக்கு ஆன்மிக சுற்றுலா வர முடிவு செய்து, கடந்த 26-ந் தேதி விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர், அவர்கள் 2 பஸ்களில் புறப்பட்டு கும்பகோணம், தஞ்சாவூர், ராமேசுவரம் ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு கன்னியாகுமரிக்கு நேற்று காலை வந்தனர்.

நேற்று அதிகாலை கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்த்துவிட்டு, முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று பார்த்து ரசித்தனர்.

கருப்புநிற ஆடையுடன், கழுத்தில் அய்யப்பன் படத்துடன் கூடிய ருத்ராட்ச மாலை அணிந்துள்ள இவர்கள் நெற்றியில் குங்குமத்துடன் கன்னியாகுமரியை வலம் வந்தனர்.

கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதை கண்டு மாலை அணிந்து இருந்தவர்கள் இளம் வயது வெளிநாட்டு பெண்களாக இருக்குமோ என்று நினைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி உளவுத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த குழுவில் உள்ள மெர்லேஸ் (வயது 54) என்பவர் கூறியதாவது:-

நாங்கள் செக் குடியரசு நாட்டை சேர்ந்தவர்கள். சபரிமலை அய்யப்பனின் வரலாற்று தகவல்களை கேள்விப்பட்ட நாங்கள் தொடர்ந்து 6 ஆண்டுகளாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறோம்.

எங்கள் குழுவில் 20 பெண்கள், 22 ஆண்கள் என 42 பேர் சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்துள்ளோம், மற்றவர்கள் ஆன்மிக சுற்றுலா வந்துள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்துள்ள 20 பெண்களும் 50 வயதை கடந்தவர்கள்தான்.

மேலும், நாங்கள் அனைவரும் ஆன் லைன் மூலம் சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய கேரள அரசின் அனுமதி பெற்றுதான் செல்கிறோம். நாங்கள் நாளை (இன்று) சதுரகிரி மலைக்கு செல்கிறோம். தொடர்ந்து வருகிற 7-ந்தேதி ராஜபாளையத்தில் இருந்து இருமுடி கட்டி பம்பை வழியாக சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய உள்ளோம்.

தற்போது சபரிமலையில் நடைபெற்று வரும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். அங்கு கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறைகளை மதிக்கும் நாங்கள் யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கோவிலுக்கு சென்று நாடு திரும்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story