திருச்செந்தூரில் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தல்
சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து 15, 16-வது வார்டு பகுதிகளான ஆலந்தலை பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக, எல்லப்பநாயக்கன்குளத்தின் கரையில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து ஆலந்தலைக்கு செல்லும் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.
இதனால் ஆலந்தலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் நேற்று மதியம் காலிக்குடங்களுடன் திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பங்குத்தந்தை ஜெயக்குமார், ஊர் கமிட்டி தலைவர் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர்களிடம், திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் (பொறுப்பு) வேலுச்சாமி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், ஆலந்தலைக்கு செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனே சரி செய்து குடிநீர் வழங்கப்படும். வருகிற 7-ந்தேதிக்குள்(திங்கட்கிழமை) குடிநீர் குழாய் முழுவதையும் ஆய்வு செய்து, சீராக குடிநீர் வழங்கப்படும். ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டத்தில் ஆலந்தலை பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும். ஆலந்தலையில் பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story