கருமத்தம்பட்டி அருகே, கோவிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் சாலையோரத்தில் கிடந்தன
கருமத்தம்பட்டி அருகே கோவிலில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் சாலையோரம் கிடந்தன. அவைகளை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருமத்தம்பட்டி,
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அருகே கோவை-அவினாசி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பாழடைந்த கட்டிடத்தின் முன்பு 2 ஐம்பொன் சிலைகள் கிடந்தன. இந்த பகுதியில் மாடு மேய்க்க சென்ற பாலு என்பவர் இதைப்பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலைகளை மீட்டனர்.
அவை, 2 அடி உயரமுள்ள வேணுகோபால்சாமி, 1 அடி உயரமுள்ள சத்திய பாமா சிலைகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணையில் 2 ஐம்பொன் சிலைகளும் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள கள்ளப்பாளையம் பெருமாள் கோவிலில் கடந்த மாதம் திருடு போனவை என்பதும், இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இந்த சிலைகள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை ஆகும். இதனை அறிந்த கருமத்தம்பட்டி போலீசார் மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளையும் மங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள கோவிலில் திருடு போன ஐம்பொன் சிலைகளை கருமத்தம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வீசிச்சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை சேகரித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story