ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு


ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Jan 2019 10:48 PM GMT (Updated: 2019-01-03T04:18:46+05:30)

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி பாராளுமன்ற தொகுதி ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவினாசி (தனி), பவானிசாகர் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. நாடு முழுவதும் வருகிற மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வாக்களித்த பின்னர் வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கவும், ஓட்டு எண்ணிக்கை நடத்தவும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி தேர்தல் ஆணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

கல்லூரியில் 3 பிளாக்குகளில் உள்ள வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறை, ஓட்டு எண்ணும் இடம், கண்காணிப்பு அறை, தேர்தல் அதிகாரிகள் அறை, பத்திரிகையாளர்கள் அறை, போலீசார் பாதுகாப்புக்கான அறை ஆகியவற்றை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் கலந்தாலோசித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, சப்-கலெக்டர் ரஞ்சித் சிங், அந்தந்த தொகுதிகளின் தாசில்தார்கள் மற்றும் பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் ஆயிரத்து 413 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தல் முடிந்த உடன், வாக்குச்சாடி மையங்களில் இருந்து வாக்கு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்படும். வாக்கு பெட்டிகள் வைக்கும் இடம் மற்றும் ஓட்டு எண்ணும் இடம் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 13 லட்சத்து 36 ஆயிரத்து 484 வாக்காளர்கள் உள்ளனர். ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி பாதுகாப்பான இடமாக உள்ளதால், இந்த மையம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

இன்று (நேற்று) நடந்த ஆய்வுக்கு பிறகு தேர்தல் ஆணையத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story