புத்தாண்டு தினத்தில் மனைவியை அடித்து கொன்றது ஏன்? கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்


புத்தாண்டு தினத்தில் மனைவியை அடித்து கொன்றது ஏன்? கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 2 Jan 2019 11:30 PM GMT (Updated: 2 Jan 2019 11:08 PM GMT)

கோவில்பட்டியில் புத்தாண்டு தினத்தில் மனைவியை அவருடைய கணவர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தார். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததால், மனைவியை அடித்து கொன்றதாக கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி நடராஜபுரம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 28). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விமலா (25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விமலாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த வெல்டிங் பட்டறை தொழிலாளி குமாருக்கும் (20) இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனால் மாரிமுத்து கடந்த 31-ந்தேதி அப்பகுதியில் மற்றொரு வாடகை வீட்டில் குடியேறினார். ஆனால் அன்றைய தினம் நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பின்னர் விமலா தனது பழைய வீட்டுக்கு சென்று, அங்கு குமாருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த மாரிமுத்து ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் தன்னுடைய மனைவியை அடித்துக் கொலை செய்தார். பின்னர் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

என்னுடைய மனைவி விமலாவுக்கும், குமாருக்கும் கள்ளக்காதல் இருந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். கள்ளக்காதலை கைவிடுமாறு அவர்கள் 2 பேரையும் கண்டித்தேன். மேலும் புத்தாண்டில் இருந்து அனைத்தையும் மறந்து புதிதாக வாழ்வோம் என்று மனைவியிடம் கூறி, அதே பகுதியில் மற்றொரு வீட்டில் வாடகைக்கு குடியேறினோம். ஆனால் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையிலேயே என்னுடைய மனைவியை வீட்டில் காணாததால் அதிர்ச்சி அடைந்தேன்

அவளைத் தேடி பழைய வீட்டுக்கு சென்றேன். அங்கு அவள், குமாருடன் உல்லாசமாக இருந்தாள். இதனால் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அவர்கள் 2 பேரையும் தாக்கினேன். இதில் விமலா உயிரிழந்து விட்டாள். காயத்துடன் குமார் தப்பி ஓடி விட்டான். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மாரிமுத்துவை போலீசார் கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி சங்கர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கோவில்பட்டி கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். தலைமறைவான குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story